
Charus Kitchen
நாஞ்சில் நாட்டு அவியல்

தேவையானவை:
சீனியவரைக்காய் - 100 கிராம்.
சேனை - கால்கிலோ.
முருங்கைக்காய் – 1
வாழைக்காய் - 1
கத்தரிக்காய் - 2.
புடலங்காய் - சுமார் நாலு இஞ்சு நீளத்துக்கு.
வழுதலங்காய் ( நீளமாக இருக்கும் பச்சைக்கத்தரிக்காய் - 1
வெள்ளரிக்காய் - சின்னத்துண்டு.
தடியங்காய் - சின்னத்துண்டு ( வெள்ளைப்பூசணி)
கோவைக்காய் - 5 எண்ணம்.
மாங்காய் - பாதி.
மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.
செய்முறை
சீனியவரைக்காய், சேனை ரெண்டையும் ஒண்ணரை அங்குல நீளத்துண்டுகளா அரிஞ்சு, தனித்தனி கிண்ணங்கள்ல போட்டு வைக்கணும்.
முருங்கைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், வழுதலங்காய், வாழக்காய் முதலான எல்லாக்காய்களையும் ஒன்னரை இஞ்சு நீளத்துக்கு மெல்லிசா நறுக்கிவைக்கணும்.
மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்.
மொதல்ல, ஒரு வாணலியில ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதுல, சீனியவரைக்காயைப்போட்டு லேசா நிறம் மாறும்வரை வதக்கணும். அப்புறம் ஒரு கப் தண்ணீர் விட்டு, அதனுடன் சுத்தம் செஞ்ச சேனையை போடவும். லேசா கொதிவந்ததும் இறக்கி, தண்ணீரை வடிச்சுட்டு, நல்ல தண்ணியில ரெண்டு தடவை அலசி, தண்ணீரை இறுத்துக்கணும்.
இன்னொரு பாத்திரத்தில் எல்லாக்காய்களையும், சுத்தம் செஞ்சு போட்டு, அரை டீஸ்பூன் உப்பிட்டு வேகவைக்கணும்.இதோட சேனை, சீனியவரையையும் சேருங்க. காய்களிலிருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன் தண்ணீரை மருந்து மாதிரி விடணும். அதுக்கு மேல விட்டா குழம்பாயிடும். அவியல் செஞ்சு முடிக்கிறவரை, அடுப்பு மிதமாவே எரியட்டும்.
மாங்காய் கல்லுப்போல இருந்தா, எல்லாக்காய்கறிகளோடவே போட்டுடலாம். கொஞ்சம் பிஞ்சா இருந்தா, மசாலா போடும்போது சேர்க்கலாம். மாங்காய் போடுறதா இல்லைன்னா, ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேருங்க. ஏன்னா காயில் லேசா புளிப்பு வரணும்.
முக்கால் வேக்காடு வந்ததும், அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை காய்களோட சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசா கிளறி, மூடி போட்டு வைச்சிடுங்க. அவியல்ல இருக்கிற காய் நல்லா வெந்தப்புறம், இறக்கி ஆறினபிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைவிட்டு லேசா கலந்துடுங்க.